சமீபத்திய ஆண்டுகளில், இலங்கை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், எத்தனை பெண்கள் பாராளுமன்றத்திற்கு வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தப்பட்ட அளவிற்கு, அவர்கள் அங்கு சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பதில் குறைந்த அளவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
7-வது பாராளுமன்றம் முதற்கொண்டு, ஹன்சார்ட் (Hansards) அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை 'Manthri.lk' ஆய்வு செய்தது. கடந்த நான்கு பாராளுமன்றங்களின் செயல்திறன் தரவுகளை உற்று நோக்கினால், ஒரு நிலையான மற்றும் முக்கியமான போக்கைக் காணமுடிகிறது: சராசரியாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆண் சகாக்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவிலான (68% மட்டுமே) பங்களிப்பையே வழங்கியுள்ளனர். இது பாராளுமன்றப் பங்கேற்பில் நிலவும் தொடர்ச்சியான ஏற்றத்தாழ்வைச் சுட்டிக்காட்டுகிறது.
அட்டவணை 1: ஆண் உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் பெண் உறுப்பினர்களின் பங்களிப்பு (சதவீதத்தில்)
| பாராளுமன்ற விபரம் | 7-வது பாராளுமன்றம் (2010 – 2015) | 8-வது பாராளுமன்றம் (2015 – 2020) | 9-வது பாராளுமன்றம் (2020 – 2024) | 10-வது பாராளுமன்றம் (2024 – தற்போது வரை) |
| பாராளுமன்றத்திலுள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை | 13 | 13 | 12 | 22 |
| பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி பங்களிப்பு (ஆண்களின் பங்களிப்பில் சதவீதமாக) | 48% | 49% | 70% | 68% |

தொடர்ச்சியான சவால்களுக்கு மத்தியிலும், கடந்த நான்கு பாராளுமன்றக் காலப்பகுதிகளில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்களிப்பு ஆகிய இரண்டும் மேம்பட்டுள்ளமை அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
10-வது பாராளுமன்றம் வரலாற்று ரீதியாக அதிகபட்சமாக 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; இது 9-வது பாராளுமன்றத்திலிருந்த 12 பேருடன் ஒப்பிடுகையில் பெரும் உயர்வாகும்.
இந்த முன்னேற்றம் செயல்திறனிலும் பிரதிபலிக்கிறது. 7 மற்றும் 8-வது பாராளுமன்றங்களில், பெண்களின் பங்களிப்பு ஆண்களின் பங்களிப்பில் ஏறக்குறைய பாதியாக (48–49%) மட்டுமே இருந்தது. ஆனால், 9-வது மற்றும் தற்போதைய 10-வது பாராளுமன்றத்தில் இது 68-70% ஆக உயர்ந்துள்ளது. இது ஒப்பீட்டு ரீதியிலான செயல்திறனில் ஏற்பட்டுள்ள தெளிவான மற்றும் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
குறிப்பு: 7 முதல் 9 வரையிலான பாராளுமன்றங்களுக்கான பங்களிப்புகள் அந்தந்த பாராளுமன்றத்தின் முழு காலப்பகுதியைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன. 10-வது பாராளுமன்றத்திற்கான தரவுகள் 2024 செப்டம்பர் முதல் 2025 டிசம்பர் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது.
பங்களிப்பு என்பது, உரையாற்றிய நேரம் மற்றும் சட்டமூலங்கள்(Bills), தீர்மானங்கள் (Resolutions), கட்டளைகள் (Orders), ஒழுங்குவிதிகள் (Regulations) மற்றும் ஏனைய பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றமை ஆகியவற்றைக் கருத்திற் கொள்கிறது.
இந்த வலைப்பதிவு பங்கேற்பு மட்டங்களில் நிலவும் வேறுபாட்டிற்கான காரணங்களை ஆராய முற்படவில்லை. மாறாக, பெண்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய கட்டமைப்பு மற்றும் சமூகத் தடைகளின் பின்னணியிலேயே இந்த இடைவெளி புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறது.
