ஊடக அறிக்கை - 14 ஜூலை 2025
இதன் வெற்றிக்கு தகவல்களையும் யோசனைகளையும் வழங்க பொதுமக்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிக்கும் புதிய தளமாகிய அனுர மீட்டர் (Anura Meter) ஐ Manthri.lk இன்று (2025 ஜூலை 14) அறிமுகப்படுத்தியுள்ளது. வெரிடே ரிசர்ச்சின் ஒரு தளமாக செயல்படும் Manthri.lk, ஜனாதிபதி அவர்கள் 2024 ஜனாதிபதித் தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் (manifesto) இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் இணைய தள அடிப்படையில் அனுர மீட்டர் எனும் இப்புதிய கண்காணிப்பு அமைப்பை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தின் மூலம் பொருளாதார சீர்திருத்தம், நல்லாட்சி, ஊழல் தடுப்பு, சட்ட ஒழுங்கு, மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற பொதுநலன் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 22 வாக்குறுதிகள் தெரிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
அனுர மீட்டர் தளம் மூன்று முக்கிய மூலங்களிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது. அவையாவன;
- வெளியிடப்பட்ட மற்றும் அறிக்கைகளில் காணப்படும் தகவல்கள்
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்படும் பதில்கள், மற்றும்
- பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நம்பத்தகுந்த தகவல்கள்.
Manthri.lk இணையதளத்தில் உள்ள அனுர மீட்டர் பக்கத்திற்குச் சென்று, மக்கள் தங்கள் தகவல்களையும் யோசனைகளையும் வழங்க அழைக்கப்படுகிறார்கள்.
இது, வெரிடே ரிசர்ச்சினால் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். தகவல் பகிரப்படல் மற்றும் ஜனநாயக ரீதியான ஈடுபாட்டை மேம்படுத்துதல் என்பன இதன் பிரதான நோக்கமாகும். அனைத்து இலங்கையர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இந்த தளம் செயற்படுத்தப்படுகிறது.